உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டொனால்ட் டிரம்ப்

 

”காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன். இதுகுறித்து பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் சிறந்த மனிதர்கள். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களுடனும் பேசியுள்ளேன். இருவரும் இதில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அமெரிக்காவும் விரும்புகிறது. எனவே இவ்விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே வாஷிங்டனில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது :

ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டின்போது , நானும் பிரதமர் மோடியும் சந்தித்துக் கொண்டோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்புகிறீர்களா? என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டிருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன. இந்த விவகாரத்துக்கு மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன் என்றார்.

இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுக்கவில்லை என இந்திய மத்திய அரசு விளக்கமளித்திருந்தது..

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியது பாகிஸ்தான் எதிர்பார்த்ததைவிட மேலான நிகழ்வு என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.