விளையாட்டு

காஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கிறார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி (37) ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி நிலையம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை தங்கி பரசூட் ரெஜிமண்டில் பயிற்சி பெற்று வருகிறார். எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாக அங்கு கிரிக்கெட் பயிற்சி நிலையம் தொடங்க தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் அவர் விரைவில் உரிய அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.