இலங்கை

காலாவதியான அழகுசாதனப் பொருட்களை மீள்விற்பனை செய்யும் நிலையம் நீர்கொழும்பில் முற்றுகை – ஒருவர் கைது

– நீர்கொழும்பு செய்தியாளர் –

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு பன்சலை வீதியில் (அங்குறுகாரமுள்ள விகாரை ) அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்து தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர்.

அங்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப்பொருட்கள் (Face Whitning Cream) உட்பட அவைகள் பொதி செய்யப்பயன்படுத்தப்பட்ட பெட்டிகள் ,ஸ்டிக்கர்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்தியதில் – சந்தையில் காலாவதியான க்ரீம்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து அவைகளை புதிய டப்பாக்களில் அடைத்து வெளிநாட்டில் தலைசிறந்த அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாகவும் காலாவதி திகதியை தாங்கள் விரும்பியது போன்று பொறித்துள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார் .

குறித்த பொருட்கள் நீர்கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பெரும்பகுதிகளில் உள்ள அழகு சாதனப்பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு ,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் என்று பகிர்ந்து அளிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் , நாளைய தினம் சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் .