Breaking News

அம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

இலங்கையின் தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றநிலை காரணமாக அம்பாறை   மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தணிந்திருந்தபோதிலும் மழையுடனான காலநிலை  நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் தொடர்கின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அம்பாறை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கடந்த ஒரு வாரகாலமாக அம்பாறை  மாவட்டத்தில்  பெய்து வந்த மழை வீழ்ச்சியின் அளவு அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் தற்போது பெய்து வரும் மழை வீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அம்பாறை மாட்டத்தில் மாலை வேளையில் கடற் கரையினை அண்டிய பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றது.
மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன் சில குடியிருப்புக்களில் நீர் நிறைந்தும் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தின் சில வீதிகளில் தொடர்ந்தும் நீர் நிறைந்து காணப்படுவதால் மக்களின் போக்குவரத்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. கடற் கொந்தளிப்புக் காரணமாக இம்மாவட்டத்தின் மீனவர்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளனர்.
அத்தோடு விவசாய நிலங்களில் நீர் நிறைந்து காணப்படுவதால் நெல் வயல்கள்   வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.