கல்முனை கடற்பகுதிகளில் எண்ணெய் கசிவு
சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாது என பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு, கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் என்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இந்த எண்ணெய் பரவலானது விபத்திற்குள்ளன கப்பலின் எண்ணெய் கசிவா அல்லது வேறு படகில் இருந்து வெளியாகிய எண்ணெய் கசிவா என அறிய முடியவில்லை.
அத்துடன் குறித்த விபத்து தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மாநகர சபைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.
இதேவேளை கரையோர மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு இன்று செல்லவில்லை. இந்த எண்ணெய் பரவலின் எச்சங்கள் கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், தாவரங்களில் தென்படுவதை காண முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.