Breaking News

கன்னியா விடயத்தில் தலையிட்டார் மைத்ரி – விசேட உத்தரவை பிறப்பித்தார் !

* தொல்பொருள் ஆராய்ச்சி சபைக்கு தமிழர்களையும் இணைத்துக்கொள்ள வழிவகுக்கும் விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் அமைச்சர் மனோ

* ஜனாதிபதியுடன் நடந்த இன்றைய கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள்

கன்னியா தமிழர் நிலப்பகுதி அபகரிப்பது குறித்து இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த அமைச்சர் மனோ கணேசன் , தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அனைவரும் சிங்களவர்கள் என்பதால் அதில் தமிழர்களும் உள்வாங்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாவில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்ச்சை குறித்து முழு விபரத்தையும் அது தமிழர் பாரம்பரிய பூமி என்பதனையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ , தொல்பொருள் ஆராய்ச்சி சபையில் இருக்கும் 32 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சிங்களவர்கள் என்பதால் அதில் தமிழ் தொல்பொருள் ஆய்வாளர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அதற்குத் தேவையான அமைச்சரவை பத்திரத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கூறியதுடன் அதற்கு தனது ஒத்துழைப்பையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் கன்னியாவில் தொல்பொருள் திணைக்கள கீழ்நிலை ஊழியர்கள்,

அங்கு செல்லும் மக்களை தடுப்பது உட்பட பல அதிகாரங்களை மேற்கொள்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மண்டாவளையை ஜனாதிபதி பணித்துள்ளார்.

“ இலங்கை வரலாறு என்பது சிங்கள வரலாறு அல்ல. அது தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரியங்களை கொண்ட இலங்கை வரலாறாக இருக்கவேண்டும்..” என்றும் அமைச்சர் மனோ , ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் குறித்து உடனடி கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரி தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை மேலும் கேட்டுள்ளார் .

அதேசமயம் திருகோணமலை கன்னியா பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயம் அருகில் பௌத்த விகாரை அமைப்பது சட்டவிரோதம் என்பதும் இன்றைய கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

நுவரெலியா – கந்தப்பளை – கோட்லொஜில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியை தடுக்கவும் ஜனாதிபதி இங்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்றைய முடிவின்படி தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் ஆராய்ச்சிசபையில் 5 மேலதிக தமிழ் உறுப்பினர்களை இணைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எல்லா தமிழ் எம் பிக்களும் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இன்றைய சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன் , திகாம்பரம் , எம்பிக்களான வேலுகுமார்,திலக்ராஜ் ,வியாழேந்திரன் ஆகியோர் மாத்திரம் கலந்துகொண்டனர்.