இலங்கை

கன்னியா நில ஆக்கிரமிப்பு மீதான இடைக்கால தடை உத்தரவினை மீளப்பெற முடியாது – பிக்குகளின் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்

 

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தினையும் அதனை அண்டிய பகுதிகளையும் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவோடு சில பெளத்த பிக்குகள் அபகரித்தமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே நான்கு இடைக் கால தடை உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன.

1. குறித்த இடத்தில் விகாரை கட்டுவதற்கான தடை

2. பற்றுச்சீட்டு விற்பதற்கான
தடை

3. இந்து பக்தர்கள் சமய கடமைகள் செய்வதை எவரும் தடுக்க கூடாது என்னும் கட்டளை

4. ஆலய நிர்வாகம் கோவிலை நிர்வாகவும் செய்வதை யாரும் தடுக்க கூடாது எனும் கட்டளை

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்படி தடை உத்தரவுகளை மீளப்பெறும்படி நீதிமன்றத்திடம் எதிர்மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.

எனினும் மனுதாரர் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம் பி , இதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததுடன் இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் இடைக்கால தடை உத்தரவு தொடர வேண்டும் என்றும் மன்றில் வலியுறுத்தினார்.

நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின் இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட மாட்டாது என்றும் அது அமுலில் இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் ஒக்ரோபர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரர்களாகிய ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி துரைராஜசிங்கம் ஆகியோர் ஆஜாரானார்கள்.