கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரி அபாயா தடையை நீக்குக – மத்திய மாகாண ஆளுநர் உத்தரவு
கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அரசாங்க வர்த்தமானியின் விதிகளுக்கு அமைய முஸ்லிம் ஆசிரியைகள் முகத்தை மறைக்காது அபாயா, ஹிஜாப் அணிந்து பாடசாலைகளுக்குச் செல்லலாம். அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் 7 முஸ்லிம் ஆசிரியைகள் கல்லூரிக்கு கடந்த சில தினங்களாக கலர் அபாயா அணிந்து சென்ற போதும் கல்லூரியின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பழைய மாணவிகளில் சிலரும், பெற்றோர்களில் சிலரும் அவர்களை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்ததையடுத்து அவர்கள் மத்தியமாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்தனர்.
நேற்று ஆளுநரின் அலுவலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடை பெற்றது. இக்கலந்துரையாடலில் கண்டி பிரஜைகள் முன்னணியின் தலைவர் காமினி ஜயவீர, செயலாளர் ரேனுகா மல்லியகொட, போஷகர் சட்டத்தரணி சி.எம்.ஹாதீம், ஆசிரியைகளின் பிரதிநிதிகள், கல்லூரியின் சார்பில் பழைய மாணவிகள் பெற்றோர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தாம் கல்லூரிக்கு கலர் அபாயா அணிந்து சென்ற போதும் கடந்த 10 தினங்களாக எம்மை பாடசாலைக்குள் அனுமதிக்கவில்லை. எமது வரவை உறுதி செய்ய கையொப்பமிட அனுமதிக்கவுமில்லை. நாங்கள் நுழைவாயிலில் காத்திருந்துவிட்டு வீடு திரும்பினோம் என்று ஆசிரியைகள் முறையிட்டனர்.
மாணவிகளின் பாதுகாப்பு கருதியே அபாயா அணித்து வரவேண்டாம் என தடுக்கப்பட்டது. சாரி அணிந்து வரும்படி கூறப்பட்டது என கல்லூரியின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆளுநர் மைத்திரி குணரத்ன முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிவதை எவராலும் தடை செய்ய முடியாது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் கல்வி அமைச்சு சுற்று நிருபமும் வெளியிட்டுள்ளது. அதனால் ஆசிரியைகள் அபாயா அணிவதற்கு அனுமதி வழங்கவேண்டும். தடை செய்ய முடியாது. அவ்வாறு தடை செய்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் 17 முஸ்லிம் ஆசிரியைகள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 7 ஆசிரியைகளே அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
” முறைப்பாடு செய்துள்ள ஆசிரியைகள் விடுமுறைக்குப் பின் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கல்லூரிக்கு வரவில்லை. ஓரிரு தினங்கள் வந்து நுழைவாயிலில் இருந்துவிட்டு திரும்பிச் சென்றதாக அறிகிறேன்.மாணவிகளின் பாதுகாப்பு கருதி கல்லூரியின் பாதுகாப்பு குழு மற்றும் பெற்றோர், பழைய மாணவிகள் எடுத்த தீர்மானம் இது. மாணவிகள் தொலைக்காட்சியில் அபாயாவுடனான செய்திகளைப் பார்த்துவிட்டு பயந்து போயுள்ளனர். அபாயாவுடனான ஆசிரியைகளைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அஞ்சுகின்றனர். இது நான் எடுத்த தீர்மானமல்ல. கல்லூரியின் பாதுகாப்பு குழு எடுத்த தீர்மானம் என்றார்.
நன்றி – விடிவெள்ளி