உலகம்

கடுமையான நிதி நெருக்கடி: ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம் வார இறுதி விடுமுறையின்றி மூடப்பட்டது !

 

ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தற்போது 193 அங்கத்துவ நாடுகள் உள்ளன.

கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்;

மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இனம், மொழி மற்றும் சமய வேறுபாடுகளை நீக்கி நாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்றவை ஐ.நா. சபையின் தலையாய பணிகள் ஆகும்.

ஐ.நா. சபையின் செயல்பாடுகளுக்கு அதன் உறுப்பு நாடுகள் நிதி வழங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபைக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் ஐ.நா.வுக்கு தேவையான நிதியை அங்கத்துவ நாடுகள் வழங்கும்.

இந்த நிலையில் ஐ.நா. சபை, நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாகவும், மொத்த நிதியும் இந்த மாத இறுதிக்குள் தீர்ந்து, சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குவாட்ரஸ் கடந்த 9-ம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என்று ஐ.நா. சபையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐ.நா. சபையில் 131 நாடுகளில் 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன.

இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை. இதனால் ஐநா.சபைக்கு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. தற்போது வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செயல்படாது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.