Breaking News

கடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் – மஸ்கெலியாவில் சம்பவம் !


கடமையை பொறுப்பேற்க முதல் நாள் கடமைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அவர் பயணித்த பஸ் மோதி கடமை புரியும் சோதனைச் சாவடிக்கருகிலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது

மஸ்கெலிய நல்லத்தண்ணி பிரதான வீதியின் மவுசாகலை சோதனைச் சாவடிக்கருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

மெதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்து வந்த 40 வயதுடைய முன்று பிள்ளைகளின் தந்தையான அஜித் வீரசிங்க என்பவர் இன்று ஆரம்பமாகும் சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு விடேச கடமை நிமித்தம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பெயர் பதிவு செய்து விட்டு இரவு நேர கடமைக்காக மவுசாகலை பொலிஸ் சோதனைச் சாவடிக்கு சென்றபோதே இந்த விபத்தில் சிக்குண்டு பலியானார்.

மஸ்கெலியாவிலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற தனியார் போக்குவரத்து பஸ்ஸில் பயணித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மவுசாகலை சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்ட போது பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் பயணிகளை இறக்கிய சாரதி பஸ்ஸை முன்னோக்கி செலுத்தியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பொலிஸ் அதிகாரியின் மீது மோதியது.

பஸ்ஸில் மோதுண்ட பொலிஸ் அதிகாரி மீது பஸ்ஸின் முன் சில்லு ஏறி நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்

சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதிக்கு மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென விசாரணையின் போது தெரியவந்துள்ளது .

பஸ்ஸின் சாதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் நல்லதண்ணி மற்றும் மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா