Breaking News

கடந்த வார அரசியல் !

கடந்த வாரம் அரசுக்கு பல நெருக்கடிகள் வந்தன.தேர்தல் காலம் என்பதால் அவற்றை சமாளிப்பதில் அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
முதலாவது கொள்ளுப்பிட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நடந்த தாக்குதல், இரண்டாவது முச்சக்கர வண்டி சுயதொழிலாளர்  சங்கத் தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் , மூன்றாவதாக சுதந்திர சதுக்கத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் .
கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்த சோஷலிச முன்னிலை கட்சியினர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் அரசாங்கத்திற்குள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஆண்கள் பெண்கள் என்று பாராமல் பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் வந்த விடியோக்களை பார்வையிட்ட கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் சமூகமே அதிர்ச்சியடைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடமான அமெரிக்கத் தூதரகத்தின் தலைமையான அமெரிக்கத் தூதுவர் ரெப்லிட்ஸ்  அம்மையாரே ஆழ்ந்த கவலைக்குள்ளானார் என்று சொல்லப்பட்டது.
அமெரிக்காவில் பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ப்லொய்டுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும் அது நீதிமன்ற உத்தரவை மீறி நடத்தப்பட்டதாக கூறியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் அந்தளவில் கடும்போக்குடன் நடந்துகொண்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் ஆளுங்கட்சியிலுள்ள பல அரசியல்வாதிகள் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தனர்.
ஆளுங்கட்சியின் இளவயது அரசியல்வாதியான நாமல் ராஜபக்சவே பகிரங்கமாக ட்விட்டரில் கண்டனம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்த சம்பவம் குறித்து பல தரப்பில் இருந்து வந்த விமர்சனங்களையடுத்து நாமல் அன்றைய தினம் இந்த விடயத்தை பல தரப்பினருடன் பேச முயன்றார்.ஆனால் பலரும் பல காரணங்களை கூறி இந்த விடயத்தில் பொலிஸாரை நியாயப்படுத்த முயன்றதாக தெரிகிறது.ஆனால் அதில் திருப்திப்படாத நாமல் அதனை  வெளிப்படையாக சொல்வதற்காகவே அந்த ட்விட்டரை பதிவேற்றியதாக அறியமுடிந்தது.
பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து பிரதமர் – ஜனாதிபதிக்கும் பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தன.குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும்போதே மைக்கை தள்ளியபடி பொலிஸார் அவரை இழுத்துச் செல்லும் காட்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர்.இது கருத்துச் சுதந்திரத்தினை  நசுக்கும் செயற்பாடென பலர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்த சென்ற பொலிஸார் பின்னர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.இங்கு பொலிஸாரை வழிநடத்திய கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனிலின் கொலை !
அதேபோல் ஓட்டோ சுயதொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுனில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரசுக்கு தலையிடியை ஏற்படுத்தியது.ஜனாதிபதி வசிக்கும் வீட்டினருகே.. அதாவது மிரிஹான பகுதியில் இந்த சம்பவம் நடந்தமையால் அப்பகுதியில் இப்படியான பாதுகாப்பற்ற நிலைமை இருக்கிறதா என்ற கேள்வியால் பாதுகாப்புத்துறை ஆடிப்போயிருக்கிறது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.அதேபோல தாக்குதலுக்குள்ளாக முன்னர் சுனில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய ,லீசிங் மூலம் வாகனங்களை பெற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் பதில் பொலிஸ் மாஅதிபரை ஜனாதிபதி கோட்டா, இனிவரும் காலங்களில் லீசிங் வாகனங்கள் சிலவேளை சுவீகரிக்கப்படுமானால் பொலிஸாரின் அனுமதியின்றி எதுவும் நடக்கக் கூடாதென பணித்துள்ளார்.
  ”பொலிஸார் இல்லாமல் இவர்கள் அடிதடியுடன் செயற்பட முடியுமானால் நாட்டில் சட்டம் எதற்கு? ஒருவர் லீசிங் செலுத்த முடியாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்.அதைவிடுத்து சட்டத்தினை கையிலெடுக்க அனுமதிக்கமுடியாது.” என்றும் ஜனாதிபதி கூறியதாக அறியமுடிந்தது. இதனையடுத்தே இனி வரும் காலங்களில் லீசிங் செலுத்தாமல் இருக்கும் வாகனங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்த முடியாதவாறு ஜனாதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த கொலை தொடர்பில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தையடுத்து மத்திய வங்கியின் கீழுள்ள அனுமதி பெறாத லீசிங் நிறுவனங்களின் உரிமங்களை இரத்துச் செய்ய அரசு தீர்மானித்தது.ஆனாலும் அந்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.
– ரஜீவ் உடல் மீட்பு !
அடுத்ததாக கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை அதி பாதுகாப்பு வலயமாக கருதப்படும் சுதந்திர சதுக்கத்தில் மீட்கப்பட்ட ரஜீவ் ஜெயவீரவின் உடல். இந்த உடல் அருகே கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்ததால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாமென கூறப்பட்டது .ஆனால் அப்படியான ஒரு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அவர் அப்படி நடந்து கொண்டிருப்பாரா என்ற சந்தேகங்கள் எழும்பியுள்ளன.
ஸ்ரீ லங்கன் விமான சேவையில் முன்னர் பணியாற்றிய அவர் பின்னர் பகுதி நேர ஊடகராக கடமையாற்றியதால் அங்குள்ள  விடயங்கள் பலவற்றை எழுதியவராவார். எனவே இது தனிப்பட்ட பகைமை காரணமாக இடம்பெற்ற கொலையா என்பது குறித்து ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.ஆனால் அவர் ஒருவித நோயினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து அதனை கடிதம் ஒன்றில் எழுதிவைத்துவிட்டு பின்னர் அந்த கடிதத்தை பார்க்குமாறு குறுஞ் செய்தியொன்றை தனது சகோதரனுக்கு கைத்தொலைபேசியில் அனுப்பியுள்ளார்.அதேபோல, தான் நடத்தும் ரிக்கெட்டிங் நிறுவனத்தின் சாவியை ஊழியர் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் தனது வங்கியில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபா பணத்தை எடுத்திருக்கிறார்.அது இந்த கைத்துப்பாக்கி வாங்க எடுக்கப்பட்ட பணமா என்பது பற்றியும் ஆராயப்படுகிறது.
எது எவ்வாறாக இருந்தாலும் எல்லோர் மனங்களில் உள்ள கேள்வி இந்த இடத்திற்கு இவர் எப்படி வந்தார்.இரவு 11 மணி வரை அந்த பகுதியில் நடைப்பயிற்சியை மேற்கொள்ள பலர் வருவார்கள்.மீண்டும் அதிகாலை 5 மணி முதல் உடற்பயிற்சிக்காக பலர் வருவார்கள்.அப்படி வருபவர்கள் கண்ணில் படாமல் இவர் எப்படி வந்து இப்படி நடந்து கொண்டார்? ஈஸ்ரர் தின தாக்குதல் சூத்திரதாரிகளின்  சி சி ரி வி காணொளிகளை வெளியிட்ட பாதுகாப்புத்துறை  இந்த பகுதியில் சி சி ரி வி காட்சிகளை வெளியிடாமல் இருப்பது ஏன்? போன்ற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.
விமலில் கடுப்பாகிய கோட்டா !
அமைச்சர் விமல் வீரவன்ச சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் விடயங்களை கையாளும் மேலதிக செயலாளர்  – முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயை சாடிப் பேசியிருந்தார்.அதேசமயம் முன்னாள் எம் பி மிலிந்த மொரகொட நடத்தும் பாத்பைண்டர் அமைப்பை ,வெளிநாட்டு உளவு நிறுவனம் என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார். இப்படி சொல்வதால் ஏற்படும் அரசியல் விளைவுகளை தாம்  எதிர்நோக்கத் தயாரென்றும் அவர் கூறியிருந்தார்.
அமைச்சர் விமலின் இந்தக் கருத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடும் அதிருப்தியை – ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் கோட்டாவின் அமெரிக்க பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்படும் விடயத்தில் மிலிந்த மொரகொட பெரும் பணியை ஆற்றியிருந்தார்.அதேபோல அவரின் பாத்பைண்டர் அமைப்பு கூட பல சமூகப் பணிகளை ஆற்றியிருக்கிறது .மறுபுறம் ஜயநாத் கொலம்பகே அடுத்த வெளிவிவகார செயலராக நியமிக்கப்பட உள்ள ஒருவர்.கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை கொழும்பு கொண்டுவருவதற்கு பெரிதும் பாடுபட்டு அதற்காக ஜனாதிபதியிடம் நன்மதிப்பை பெற்றவர்.
இப்படியானவர்களை பொதுவெளியில் விமரிசித்த அமைச்சர் விமல் தொடர்பில் அதிருப்தியடைந்த கோட்டா ,இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல் .அரசியல் காரணங்களுக்காக தமக்கு நெருக்கமானவர்களை விமர்சிப்பது நல்லதல்லவென கோட்டாபய இதன்போது அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டாரென உள்வீட்டுச் செய்திகள் சொல்கின்றன.
மஹிந்தவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மாவை
கடந்த திங்கட்கிழமை காலை  யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ,தொலைபேசி மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச முயன்றார் . பிரதமர் அப்போது ஹோமாகமையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வு முடிந்து வெளியே வந்த கையோடு மாவையருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மஹிந்த ” யெஸ் மிஸ்டர் சேனாதிராஜா… ஐ எம் சொரி… நீங்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றீர்களா ?” என்று ஆங்கிலத்தில் வினவினார் .
” ஆமாம்.. பிரதமரே..வடக்கில் குறிப்பாக எனது தொகுதியில் இந்த ”ரன்மாவத்” வீதி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டவர்களுக்கான நிதி கிடைக்காமல் உள்ளது.அவற்றை நீங்கள் துரிதப்படுத்த வேண்டும்..” என்றார் மாவை ..
” ஓ அப்படியா ..அப்படியானால் நான் அதனை எனது செயலாளரிடம் சொல்கிறேன்…நான் யாழ்ப்பாணத்திற்கு விரைவில் வரவுள்ளேன்… ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளேன்..அங்கே வந்தால் சந்திப்போம்… ” என்று அதற்கு பதில் கொடுத்தார் மஹிந்த ..
”ஓ எப்போது மட்டில் வருவீர்கள்? வந்தால் நாங்கள் கட்சி உறுப்பினர்கள் உங்களை சந்திக்கிறோம்…ஏற்கனவே கடந்த சந்திப்பில் நாங்கள் கேட்டபடி மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டங்களுக்கு நீங்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள்..அதற்கும் நன்றி..” என்று குறிப்பிட்டார் மாவை…
மஹிந்தவுக்கு கேக் அனுப்பிய இந்தியா
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாராளுமன்ற அரசியல் வாழ்வின் 50 வருட நிறைவையொட்டி கடந்த வாரம் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சுயாதீன தொலைக்காட்சியில் இரண்டு மணிநேரம் தனது வாழ்க்கை வரலாறை வாசுதேவ நாணயக்காரவுடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் மஹிந்த.வாசுதேவ நாணயக்காரவும் மஹிந்த ராஜபக்சவும் ஒரே சமயம் பாராளுமன்றம் வந்தவர்கள்.அதேபோல சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் பிரபல இயக்குனர் சுதத் ரோஹண ,மஹிந்தவின் வாழ்க்கை வரலாறை விவரணப் படமாக தாயரித்திருந்தார்.அதனை வீட்டாருடன் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்வையிட்ட மஹிந்த, தனது கடந்த கால பசுமை நினைவுகளை மீட்டார்.
அதேசமயம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மஹிந்தவுக்கு வாழ்த்துத் தெரிவித்து மலர் பூங்கொத்துகள் சகிதம் தலா 25 கிலோ எடை கொண்ட இரண்டு கேக்குகளை அனுப்பியிருந்தார்.பிரதமரின் விஜேராம இல்லத்தில் அவை வெட்டப்பட்டன. முதலாவது கேக் துண்டை அருகில் இருந்த தனது மேலதிக செயலாளர் ஹர்ஷவுக்கு ஊட்டினார் பிரதமர். பின்னர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்புமாறு தனது செயலரை பணித்தார் பிரதமர்.
மங்களவின் விலகல் !
முன்னாள் அமைச்சரும் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி அணியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மங்கள சமரவீர திடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகினார்.அவர் மட்டுமல்ல மேலும் இரண்டு பேர் இவ்வாறு விலகினாலும் மங்களவின்  விலகல் தான் பெரிதும் பேசப்பட்டது.
சிங்கள பௌத்த தேரர்களுக்கு எதிராக மங்கள அடிக்கடி பேசுவது மற்றும் விமர்சனங்களை முன்வைப்பது கட்சி மேல் மட்டத்தில் அவர் மீது பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருந்தது.அதேபோல கொரோனவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது , கிழக்கு மாகாண தொல்லியல் செயற்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணி ,இராணுவச்  சிப்பாய் சுனில் ரத்னாயக்கவுக்கான பொது மன்னிப்பு உட்பட்ட விடயங்களில் சஜித் பிரேமதாச ஒரு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்து கட்சி நிலைப்பாட்டை அறிவிக்காமை போன்ற காரணங்களால் மங்கள பெரிதும் அதிருப்தியடைந்திருந்தாரென தகவல் .
பாராளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகுவது சம்பந்தமான தீர்மானத்தை அறிவிக்க முன்னர் மங்கள ,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை சந்தித்து தனது தீர்மானத்தை விளக்கிக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக உடைப்பது தங்களது நோக்கமாக இருக்கவில்லையென மங்கள இதன்போது குறிப்பிட்டுள்ளார்.அதேசமயம் சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ரணில் மங்களவிடம் குறிப்பிட்டாரென தகவல்
இ தொ காவுக்குள் நடக்கும் சேறுபூசல் !
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைந்த பின்னர் அவரது கட்சியின் தலைமைப்பதவியில் சிலர் கண்வைத்துள்ளதாக தகவல். அதனால் அதனை கைப்பற்ற ஆறுமுகம் குடும்பத்தின் மீது ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக சொல்லப்படுகிறது.
அதன்  ஒரு அம்சமாகவே ஆறுமுகத்தின் மருமகன் தர்ஷன் ,அமைச்சின் ஊழல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டாரென கடந்த வாரம் பரவலாக செய்திகள் பரப்பப்பட்டன.ஆனால் இது உள்வீட்டு வேலையாக இருக்குமோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இது தொடர்பில் ஆராய்ந்து இப்படியான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கட்சி தயாராகி வருவதாக தெரிகிறது.
அதேவேளை பெருந்தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளை ஜீவன் தொண்டமான் சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் சந்தித்துப் பேசினார்.தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உட்பட்ட பல விடயங்கள்  இதன்போது பேசப்பட்டன.
அதேசமயம் சம்பளப் பிரச்சினை குறித்து இ தொ கா வரும் வாரத்தில் அநேகமாக புதன்கிழமை பிரதமரை சந்தித்துப் பேசுமென தெரிகிறது.
– ஆர்.சிவராஜா –