விளையாட்டு

ஒரு நாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

 

பாகிஸ்தானுடனான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டுபாயில் நேற்று முன்தினம் நடந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 98 ரன்னும், மேக்ஸ்வெல் 70 ரன்னும் (33 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன்), ஷான் மார்ஷ் 61 ரன்னும், அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 53 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வாரி 4 விக்கெட்டும், ஜூனைத்கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது சதம் அடித்த ஹாரிஸ் சோகைல் 130 ரன்னும், ஷான் மசூத் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஹாரிஸ் சோகைல் சதம் பலன் அளிக்காமல் வீணானது. பொறுப்பு அணித்தலைவர் இமாத் வாசிம் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெரென்டோர்ப் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதும், அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.