விளையாட்டு

ஐ.பி.எல் – சென்னை 7 விக்கெட்டுகளால் வெற்றி

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு , நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், உத்தப்பா 11 ரன், சுப்மான் கில் 9 ரன், நிதிஷ் ராணா 0 ரன், பியூஸ் சாவ்லா 8 ரன், குல்தீப் யாதவ் 0 ரன், பிரசித் கிருஷ்ணா 0 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட், ஹர்பஜன்சிங் 2 விக்கெட், இம்ரான் தாஹிர் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (111 ரன்கள்) எட்டியது. இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 43 ரன்கள், அம்பத்தி ராயுடு 21 ரன்கள், எடுத்தனர். கொல்கத்தா அணியில் சுனில் நரின் 2 விக்கெட், பியூஸ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர்.