விளையாட்டு

ஐ.பி.எல். – கொல்கத்தா அணி 4-வது வெற்றி

ஐ.பி.எல். – கொல்கத்தா அணி 4-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை ருசித்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 21-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் றோயல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.

நாணயச்சுழற்சியில் ஜெயித்த கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக், முதலில் ராஜஸ்தானை துடுப்பெடுத்தாட அழைத்தார். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பயங்கரமாக காற்று வீசி புழுதி கிளம்பியது. இதனால் கொல்கத்தா விக்கெட் கீப்பர் உத்தப்பா முகக்கவசம் அணிந்தபடி களமிறங்கினார்..

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணித் தலைவர் ரஹானேவின் (5 ரன்) விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு விளையாடினாலும் விக்கெட் கைவசம் இருந்தும் கொல்கத்தாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் தவித்தனர். ஜோஸ் பட்லர் 37 ரன்களும், திரிபாதி 6 ரன்னும் எடுத்து பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்..

ஸ்டீவன் சுமித் 73 ரன்களுடனும் (59 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னுடனும் (14 பந்து) களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி 3 மற்றும் அதற்கு குறைவான விக்கெட்டுடன் ஒரு அணி எடுத்த குறைந்த ஸ்கோர் இது தான்.

அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரின் (47 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கிறிஸ் லின் (50 ரன், 32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) இருவரின் அதிரடி ஆட்டம் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது.

கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உத்தப்பா 26 ரன்களுடனும், சுப்மான் கில் 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 5-வது போட்டியில் 4-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தானுக்கு இது 4-வது தோல்வியாகும்.

கிறிஸ் லின்னுக்கு லக் !

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 13 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது தவால் குல்கர்னி வீசிய பந்து லெக் ஸ்டம்பை தாக்கி, லைட் எரிந்தது. ஆனால் ஸ்டம்ப் மீது இருந்து பெய்ல்ஸ் அசையவில்லை. அது கீழே விழாததால் அவுட்டில் இருந்து தப்பித்த கிறிஸ் லின் அதன் பிறகு அரைசதம் அடித்து அசத்தினார்.