விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிடுகின்றன

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறும் 18-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வெற்றியை தனதாக்கியது. முந்தைய லீக் போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் சென்னை பந்துவீச்சாளர்கள் 67 ரன்களை வாரி வழங்கியது பாதகமான அம்சமாக மாறியது.

சென்னை அணியில் ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். மும்பைக்கு எதிரான போட்டியில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட வெய்ன் பிராவோ 2 வார காலம் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்ஹஸ்சி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஆல்-ரவுண்டரான வெய்ன் பிராவோ இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலின் களம் இறங்குவார் என்று தெரிகிறது.

இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் மோதும் 3-வது போட்டி இதுவாகும். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முந்தைய 2 லீக் போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்கள் ரன் எடுக்க திணறினர். இருப்பினும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி (ராஜஸ்தான், மும்பை, டெல்லி அணிக்கு எதிராக), ஒரு தோல்வி (கொல்கத்தா அணியிடம்) கண்டுள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக விளையாடாத பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உடல் தகுதியை பெற்று விட்டதால் இன்றைய போட்டியில் களம் திரும்புகிறார். இதே போல் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இளம் ஓல்-ரவுண்டர் சாம் குர்ரன் இன்றைய ஆட்டத்திலும் தொடருவார் என்று தெரிகிறது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணியிலும் முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் இரண்டு அணியிலும் அதிரடி காட்டக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 போட்டிகளிலும் , பஞ்சாப் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

ஐதராபாத்தில், இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. ரன் குவிப்பில் மிரட்டி வரும் ஐதராபாத் அணி உள்ளூரிலும் வெற்றிப்பயணத்தை நீடிக்கும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது.