விளையாட்டு

ஐ.பி.எல் இன்றைய போட்டி – ஒரு குறிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் – றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோத உள்ளன. முதல் வெற்றியை பெறும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்குகின்றன

நடப்பு ஐ.பி.எல். தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத அணிகளாக ராஜஸ்தான் றோயல்ஸ்- றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இருக்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளன .

பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியிடமும், 2–வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், முந்தைய போட்டியில் ஐதராபாத் அணியிடமும் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் றோயல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டது. ராஜஸ்தான் அணி தனது 3 ஆட்டங்களிலும் நெருக்கமாக போராடி தான் தோல்வியை தொட்டது.

இவ்விரு அணிகளிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் ஒருசேர அணியாக செயல்படுவதில் வெற்றி காண முடியாமல் சரிவை சந்தித்து வருகின்றன. வெற்றிக் கணக்கை தொடங்கி தங்களுக்குள்ள நெருக்கடியை குறைக்க இரு அணிகளும் கடுமையாக முயலும் என்பதால் இன்றைய போட்டியில் இன்றைய போட்டியில் அதிரடிக்கு குறைவு இருக்காது. உள்ளூரில் விளையாடுவது ராஜஸ்தான் அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் வீரர்கள்: அணித்தலைவர் ரஹானே, ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனட்கட், சஞ்சு சாம்சன்

றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள்: கேப்டன் விராட்கோலி, டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், ஹெட்மயர், உமேஷ் யாதவ், பார்த்தீவ் பட்டேல்

இதுவரை இந்த அணிகளுக்கிடையில் 18 போட்டிகள் நடந்துள்ளன .அதில் ராஜஸ்தான் 9 போட்டிகளில் வெற்றியையும் ,பெங்களூரு 8 போட்டிகளில் வெற்றியையும் பெற்றுள்ளன – ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது

இன்று ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு இன்றைய போட்டி நடக்கும் .