Breaking News

ஐ தே க சம்மேளனம் ஒரு வாரத்திற்குள் !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட கட்சியின் செயற்குழு ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ள சூழ்நிலையில் கட்சியின் சம்மேளனத்தை ஒரு வார காலத்திற்குள் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த சம்மேளனத்தின்போது இந்த செயற்குழுவின் அங்கீகாரத்திற்கு மேலதிக ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு கூடவுள்ளது.செயற்குழுவின் இந்த முடிவு பாராளுமன்றக் குழுவில் அங்கீகரிக்கப்படவுள்ளது .

கட்சியின் இந்த ஏகமனதான தீர்மானத்தையடுத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ள சஜித் பிரேமதாச ,தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து அவர்களின் கருத்தை கேட்டறிவார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு – தேர்தல் முறை மறுசீரமைப்பு – அதிகாரப்பகிர்வு ஆகிய யோசனைகள் இந்த சம்மேளனத்தில் முன்வைக்கப்படவுள்ளன.