Breaking News

ஐ.தே.க இழுபறி நீடிப்பு – தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளர் அறிவிப்பு – சஜித் ஆதரவு அடுத்த கூட்டம் குருநாகலில் !

 

ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவை நியமிப்பதில் உள்ள இழுபறி நிலைமை தொடர்கிறது.

சஜித் ஆதரவாளர்களாக இருந்து கட்சித் தலைவரை பொதுவெளியில் விமரிசித்த இரண்டு எம் பிக்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை பிரதமர் ரணில் இதுவிடயத்தில் எச்சரித்திருப்பதாக அறியமுடிந்தது.

சஜித்துக்கு ஆதரவாக செயற்படும் அமைச்சர்களின் அமைச்சுப்பதவிகள் கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் சஜித் ஆதரவு அணியில் இருந்த பலர் இப்போது அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.

எனினும் நேற்று இரவு அமைச்சர் மங்களவின் இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட சஜித் ஆதரவு எம் பிக்கள் பலர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரும் கடிதத்தில் ஒப்பமிட்டு அதனை கட்சித் தலைவரிடம் கொடுப்பதென தீர்மானித்தனர்.

இதற்கிடையில் குருநாகல் நகரில் வரும் 6 ஆம் திகதி சஜித் ஆதரவு கூட்டமொன்றை நடத்த இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சஜித் ஆதரவாளர்கள் பலர் தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் கட்சித் தலைமை கவனமாக ஆராய்ந்து வருவதாக அறியமுடிந்தது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக சற்று முன் அறியமுடிந்தது.