உலகம்

ஐ.எஸ். அமைப்பிடம் பணம்வாங்கி விட்டாரா கமல்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி

ஐ.எஸ். அமைப்பிடம் பணம்வாங்கி விட்டாரா கமல்? என்று தமிழக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று பேசினார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பாஜகவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், திரையுலகினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் கடுமையான வார்த்தைகளால் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், கமல்ஹாசன் நாக்கில் சனி உள்ளது. அதனால் தான் அவர் அப்படி பேசுகிறார். அவருடைய கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஐ.எஸ். அமைப்பிடம் பணம்வாங்கி விட்டாரா கமல்? அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது. கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்; அவர் இத்தாலிக்குத்தான் செல்ல வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார்.

பிரிவினைவாதத்தோடு கமல் பேசுவதால் மக்கள் நீதி மய்யத்தை தடை செய்ய வேண்டும். சுதந்திர இந்தியாவின் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்கவேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன் என்றார்.