உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரித்தானியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் பிரித்தானியா வெளியேறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதிலிருந்து வெளியேற பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரித்தானியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில்இ வெளியேற விருப்பம் தெரிவித்து, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்தனர்.

எனினும்,  “பிரெக்சிற்” பிரேரணை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும் இழுபறிகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, பிரித்தானியா வெளியேறுவதை அனுமதிக்கும் பிரேரணை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.

வாக்கெடுப்பில் இந்த பிரேரணைக்கு ஆதரவாக 621 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதையடுத்து இந்த பிரேரணை நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா இன்று நள்ளிரவுடன் வெளியேறுகிறது.