விளையாட்டு

ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணம் 2019

ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி மிகவும் விசாலமாக அமைந்துள்ளது, எந்த அணியையும் வெல்லும் அணியாக கூற முடியாது என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-3 என கணக்கில் இழந்தது இந்திய அணி. உள்ளூரில் இந்திய அணியை ஆஸி. வீழ்த்தியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக விராட் கோலி கூறியதாவது-

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கான பந்தயம் மிகவுóம் விசாலமாக உள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவை பட்டம் வெல்லும் அணிகளாக கூறி வருகின்றனர். ஆனால் தற்போது எந்த அணியையும் அவ்வாறு கூற முடியாது.

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு அணியும் அச்சுறுத்தலாகத் தான் உள்ளன. எந்த அணியையும் தடுத்து நிறுத்துவது கடினம்.

அரையிறுதியில் எந்த அணியையும் வெளியேற்ற முடியாது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி தைரியமாகவும், விவேகமாகவும் ஆடுகிறதோ அது வெற்றி பெறும். தற்போது மே.இ.தீவுகள் அணியும் பலம் பெற்று வருகிறது. அந்த அணியின் கட்டமைப்பை பார்க்கும் போது, பல அணிகளுக்கு அது சிக்கலை தரும்.
இங்கிலாந்து பலமானதாக உள்ளது. ஆஸி. அணியும் தற்போது சீராகி உள்ளது. நாமும் வலுவான அணியாக உள்ளோம். அதே போல் நியூஸிலாந்தும், பாகிஸ்தானும் எந்த அணியையும் வெல்லும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
நான்காம் நிலை பேட்ஸ்மேன், 2-ஆம் விக்கெட் கீப்பர்
அணியை கட்டமைப்பதில் நிர்வாகத்துக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தோல்வியை அடுத்து சில குறிப்பிட்ட இடங்களை சரி செய்ய வேண்டும்.
குறிப்பாக நான்காம் நிலை பேட்ஸ்மேன், மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பர் தொடர்பாக தீர்வு காணப்பட்டுள்ளது.
அவற்றுக்கு யாரை களமிறக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். கடைசி மூன்று போட்டிகளிலும் சில சோதனைகளை செய்து பார்த்தோம். நமது தரத்தை உயர்த்த வேண்டும். உலகக் கோப்பைக்கு செல்வதற்கு முன்பு மிகுந்த நம்பிக்கையுடன் செல்ல வேண்டும். வீரர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்வர் என நம்புகிறேன். பல ஆட்டங்களில் நாங்கள் ஆடி வருகிறோம். இத்தொடர் சரியாக அமையவில்லை. நாங்கள் அணியாக நன்றாக தான் விளையாடினோம்.ஆஸி. அணி வெறியோடு விளையாடி வெற்றி பெற்றனர். அவர்களுக்கு உரியது வெற்றி.

உலகக் கிண்ண போட்டிக்கு நல்ல உடல்தகுதியுடன் இருக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளால் ஏற்படும் ஆட்ட சுமையை சமாளிப்பது வீரர்களின் பொறுப்பாகும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மே 30-ஆம் தேதி ஐசிசி உலகக் கிண்ண போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் பிரபலமான ஐபிஎல் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கி மே மாத மத்தியில் முடிவடைகிறது. உலகக் கிண்ண பிரதானமான போட்டி ஆதலால், பல்வேறு நாடுகளின் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில் தயக்கம் காண்பிக்கின்றன.

ஐபிஎல் போட்டிகளால் ஏற்படும் ஆட்ட சுமையை விவேகமாக சமாளிப்பது இந்திய வீரர்களின் பொறுப்பாகும். நான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என நமது வீரர்களை கூறவில்லை. ஆனால் இதனால் ஏற்படும் சுமையை விவேகமாக சமாளியுங்கள் எனத் தான் கூறியுள்ளேன். உலகக்கிண்ண போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஆனால் ஐபிஎல் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது.
உடல்தகுதியை பராமரிக்க சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் இந்திய அணி உள்ளது. இந்த தோல்வியால் வீரர்கள் பதற்றமடையவில்லை. கடந்த சில மாதங்களாக சிறப்பாக விளையாடி வருகிறோம். சரியான கலவை கொண்ட அணியாக நமது அணி திகழும்.
ஹார்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைவார். அதன் பின்பு பேட்டிங், பந்துவீச்சு போன்றவற்றில் வாய்பபுகள் நமக்கு கிடைக்கும். உலகக் கிண்ண போட்டியில் அழுத்தம் ஏற்படும் நேரங்களில் சிறந்த முடிவுகளை எடுப்போம். யாருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அவர் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். ஒரு தொடரில் சில வீரர்களை களமிறக்கி பார்க்கும் போது தான்அவர்களது திறமை வெளிப்படுகிறது’ என்றார்.