உலகம்

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம்- மாநாடு ஆரம்பம்

‘மட்ரிட் 2019’ என்ற ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் மாநாடு ஸ்பெயின் தலைநகரில் ஆரம்பமாகியுள்ளது.

அரசியல் தலைவர்களும், இராஜதந்திரிகளும் காலநிலை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஸ்பெயின் மட்ரிட்டில் கூடியுள்ளனர்.

இதற்கிடையில், காலநிலை மாற்றத்தால் ஆபிரிக்காவில் மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக சேவ் த சில்ரன் அமைப்பு கூறியுள்ளது.

சூறாவளி மற்றும் வறட்சி காரணமாக 33 மில்லியன் மக்கள் அவசரகால உணவுப் பாதுகாப்பின்மையால் அவதியுறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித நடவடிக்கைகள் காபனீரொக்சைட்டின் அளவு அதிகரித்து, உலகின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவவதோடு, பச்சை வீட்டு விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு சிலியில் நடைபெறவிருந்தது, எனினும் பல வாரங்களாக அந்த நாட்டில் தொடரும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இது இரத்து செய்யப்பட்டது.

அனைத்து நாடுகளும் புவி மாசடைவதை குறைப்பதற்கான தேசிய கடமைகளை அதிகரிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.