இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பெலியத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், வரலாற்று பின்னணியை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலவீனமடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன என சுட்டிக்காட்டிய பிரதமர் அபிவிருத்தி பணிகளில் மாகாணங்களுக்கிடையில் எவ்வித வேறுப்பாடும் காணப்படக் கூடாது என்ற நோக்கில் அவ்வாறு செயற்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த அரசாங்கத்தில் எந்த மாகாணத்திலும் முறையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் மாறாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கும் மத்தளை விமான நிலையம் நெற் களஞ்சியசாலையாகவும் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்தோடு அரசியல் பழிவாங்களுக்காக நாட்டின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் முடக்கப்ட்டன என்றும் இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.