உலகம்

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்த 2019ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான  நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், குறிப்பாக அண்டை நாடான எரித்திரியாவுடனான எல்லை மோதலைத் தீர்ப்பதற்கான அவரது தீர்க்கமான முயற்சிகளுக்காகவும் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய, காலநிலை ஆர்வலர் கிரேட்டா  தன்பெர்க்இ ஜேர்மனிய ஜனாதிபதி ஏங்கல மேர்க்கல்  மற்றும் ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிந்துரையில் இருந்தன.

எனினும் இன்றைய தினம் எதியோப்பிய பிரதமர் அபி அஹமட்டின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1901 முதல், 99 அமைதிக்கான நோபல் பரிசுகள் தனிநபர்களுக்கும் 24 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கல் நிகழ்வுகள் சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இடம்பெற்றாலும், அமைதிக்கான நோபல் பரிசு மாத்திரம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.