உலகம்

‘எண்ணெய் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயரும்’ – சவுதி அரேபிய இளவரசர்

உலக நாடுகள் ஈரான் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவல்லையெனின், “எண்ணெய் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயரக்கூடும்” என சவுதி அரேபிய இளவரசர் எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிடும் என மொஹமட் பின் சல்மான் கூறயுள்ளார்.

சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல்களின் பின்னர், ஈரானுக்கு இராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து தெரிவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக சவுதி எச்சரிக்கையுடனான அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது.

சவுதி அரேபியா போரை தவிர்க்க விரும்புவதாகவும், எனினும் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சவுதி அரேபியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்திருந்தார்.

ஹவுத்தி போராளிகள் இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளதை நம்ப முடியவில்லை எனவும் காரணம்,தாக்குதலின் அளவு, நுட்பம் மற்றும் வரம்பு ஆகியன அந்த அமைப்பின் இயலுமைக்கு அப்பால் காணப்படுவதாக ஏற்கனவே கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், அடெல் அல்-ஜுபைர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தாக்குதல்களுக்கு ஈரான் காரணமாக அமைந்துள்ளதாக, அமெரிக்கா கூறுவதை, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தன. எனினும், ஈரான் அதனை மறுத்திருந்தது.

இவ்வாறான நிலையில், சவுதி மீண்டும் இவ்வாறான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.