இலங்கை

ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: விசாரணை நடத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாலக்க களுவெவ, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை கடிதம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒருவர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி சட்டரீதியாக கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

அவ்வாறான ஊடகவியலாளர் ஒருவருக்கு தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டியதன் பொறுப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் அரசினால் சான்றுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தனது கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தின் ஊடாக குறித்த ஊடகவியலாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை முழுமையாக புலப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகளை, ஊடகத்துறை அமைச்சர், ஊடகத்துறை அமைச்சு, அதன் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் , ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதமரின் ஊடகப் பிரிவு தலைமை அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.