உஷ்... இது இரகசியம் !

உஷ் – கோதாபய ராஜபக்சவை இரகசியமாக சந்தித்த சாகல !

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிமனைத் தலைவரும், அமைச்சருமான சாகல ரத்நாயக்க, மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள கோதாபய ராஜபக்சவை இரகசியமாக சந்தித்துள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் கபீர் ஹசீம் மூலம் இந்த இரகசிய சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் கபீர் ஹசீம், நோய்வாய்பட்டிருந்தபோது, கோதாபய ராஜபக்சவும், அவரது பாரியாரும், முன்னறிவித்தல் இன்றி அமைச்சரை வீட்டிற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் கபீர் ஹசீம், மருத்துவ சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பிய கோதாபய ராஜபக்சவின் நலன் விசாரிக்க அவரது வீட்டிற்கு நேற்று (04) முன்னறிவித்தல் இன்றி சென்றுள்ளார்.

இதன்போது, அமைச்சர் சாகல ரத்னநாயக்க, கோதாபய ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அமைச்சர் கபீர் ஹசீமின் வருகையில் திக்குமுக்கு ஆடியுள்ள சாகல ரத்நயாக்க, தட்டுத் தடுமாறி சில வார்த்தைகளை பேச முயற்சித்துள்ளார்.

நிலைமையை சுதாரித்துக் கொண்ட கபீர் ஹசீம், அவர்கள் இருவரையும் பேச இடமளித்து அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் சாகல ரத்நாயக்க, அண்மையில் கோதாபய ராஜபக்சவைச் சந்தித்து பேசியதாக, நேற்று முன்தினம் (03) ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தபோதும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு எவ்வித பதிலையும் வழங்காது ஐ.தே.க. உறுப்பினரின் கதையை ரணில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதனடிப்படையில் கோதாபய ராஜபக்சவின் வீட்டிற்குச் சென்று அமைச்சர் சகால ரத்நாயக்க இந்த இரகசிய சந்திப்பை நடத்தினார் என்பது குறித்தோ, என்ன விடயம் பேசப்பட்டது என்பது குறித்தோ உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், இந்த விவகாரம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.