இலங்கை

உஷ் இது ரகசியம் !

ஜனாதிபதியின் நேற்றைய புதுவருட நிகழ்வில் கலந்துகொள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் வெகு சிலரே கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய நிகழ்வாக இதனை ஒழுங்கு செய்ய பேசப்பட்டது.ஆனால் அரசியல் களம் நன்றாக இல்லாதபடியால் தனித்தனியாக செய்ய தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வு ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.11 மணிக்கு சென்ற பிரமுகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.பிற்பகல் 2 மணிக்கு நிகழ்வுக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்வு ஆரம்பிக்க தாமதமானதால் ஏற்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வெளியேறினார்.

ஆனாலும் கூட்டமைப்பின் எம் பி சுமந்திரன் ,வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , ஈ .பி. டி . பி டக்ளஸ் தேவானந்தா எம் பி ஆகியோர் கலந்து கொண்டனர். டக்ளசும் சுமந்திரனும் காலையில் சென்று திரும்பி வந்து மீண்டும் பிற்பகல் சென்றவர்களாவர் ஆசிய வானொலிக் கூட்டுத்தாபன தலைவர் ரெனோ சில்வாவும் சுமந்திரன் எம் பியும் நீண்ட நேரம் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர்.

”தென்னிலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அரசு மீது ஒருவித அதிருப்தி நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட ரெனோ சில்வா – வடக்கின் நிலைமை எப்படி?” என்று சுமந்திரனிடம் வினவினார். பொருளாதார பிரச்சினை மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்று அதற்கு பதிலளித்தார் சுமந்திரன் .

வழமையாக கலகலப்பாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய நிகழ்வில் சற்று டென்ஸனாக இருந்தாரென சொல்லப்பட்டது.அரசியல் ரீதியில் இவ்வருடம் அவருக்கு முக்கியமான வருடம்.ஜனாதிபதித் தேர்தல் – தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானம் – மஹிந்தவுடனான அரசியல் கூட்டு – பிரதமர் தரப்புடனான மனக்கசப்பு உட்பட்ட சவால்கள் அவர் முன் இருப்பதால் அவர் சற்று டென்சன் மூட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.

ரணில் நுவரெலியாவில் !

பிரதமர் ரணில் நுவரெலியாவில் நேற்று புதுவருடத்தைக் கொண்டாடினார். துணைவியார் மைத்ரியுடன் அவர் ஒய்வைக் கழித்தார். வழமையாக புதுவருட சம்பிரதாயங்களில் பெரிதும் ஈடுபடாத ரணில் நேற்று பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றார். ஜனாதிபதி பால் பொங்கிய அதேசமயம் ரணிலும் பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றது நெருங்கிய தேர்தல் ஒன்றுக்கான அறிகுறியை காட்டுவதாக சொல்லப்படுகிறது.

மஹிந்த தங்காலையில் !

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தங்காலையில் தனது குடும்பத்தினருடன் பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றார்.ஏராளமான ஆதரவாளர்கள் திரள்வதால் வரும் ஆதரவாளர்களுக்கு உணவு சமைத்து வழங்க மஹிந்த தனி குழுவொன்றை நியமித்துள்ளதாக அறியமுடிந்தது

புதுவருட நிகழ்வுகள்

தெரண தொலைக்காட்சி நிறுவத்தினர் பாராளுமன்ற எம் பிக்களுக்கான புதுவருட நிகழ்வுகளை நடத்தினர். இதில் கலந்து கொண்ட எம் பிக்கள் வினோத உடை மற்றும் ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொண்டனர். குமார வெல்கம எம் பி பாடிய பாடல் அனைவரின் வரவேற்பை பெற்றது.அதேபோல் மஹிந்த அமரவீரவின் பாடல் ஒன்றும் பிரமாதமாக இருந்தது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் எம் பியாவார்.

தமிழரசுக் கட்சியின் மாநாடு !

தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறப் போவது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அந்த மாநாட்டில் உயர்பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாமென சொல்லப்பட்டாலும் அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை என்கின்ற கட்சியின் உள்ளகத் தகவல்கள் .

மாவை சேனாதிராசா தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னர் அறிவித்தாலும் பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.அப்படியான நிலையில் செயலாளர் துரைராஜசிங்கத்தை மாற்றினால் கிழக்குக்கு அநீதி இழைத்ததாக கருதப்பட்டுவிடும் என்பதால் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் மாற்றங்களை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

சஜித் பிரதமராக வருவாரா ?

சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க மைத்ரி தீர்மானம் எடுத்துள்ளதாக நேற்று பலர் பிரதமர் ரணிலுக்கு தொலைபேசியூடாக சொன்னபடி இருந்தனர்..ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத ரணில் ” நடப்பது நடக்கட்டும் பொறுத்திருங்கள்” என்றாராம்.

அதேசமயம் முக்கிய பல அமைச்சர்கள் சஜித்தை தொடர்புகொண்டு இதைப்பற்றி வினவினர்.ஆனால் அப்படி ஒன்றுக்கான அவசியம் இல்லையென சஜித் அவர்களிடம் தெரிவித்தாராம் .