உஷ்... இது இரகசியம் !

* சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பிறந்தநாள். பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழமைபோல

 

* சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பிறந்தநாள். பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழமைபோல தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாராம்..

இருவரும் அரசியல் உட்பட பலதும் பத்தும் பேசினார்களாம்..

“ என்ன கபீர்.. உங்களது கட்சியில் சில பேர் அநாவசிய தலையீடு செய்கிறார்கள் என்று கட்சிக் கூட்டத்தில் கோபப்பட்டீர்களாமே.. குறிப்பாக அம்மையார் ஒருவர் ” என்றாராம் மஹிந்த சிரித்தபடி..

“ ஐயோ ப்ரைமினிஸ்டர்.. வேண்டாம் வேண்டாம்… பிறகு ஒரு நாள் ஆறுதலாக பேசுவோம்…” என்று பதிலுக்கு சிரித்தபடி கூறி போனை வைத்தாராம் கபீர்…
*———————————————————————————————————————————————-

* இராணுவ வெற்றிவிழா நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் நடந்ததல்லவா ? அங்கு பெரிய சர்ச்சைக்குரிய விடயம் ஒன்று நடந்தமை யாருக்கும் தெரியாது…

மதகுருமாருக்கு அமர ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதலாவது வரிசையில் மாநாயக்க தேரர்மார் அமரவும் அதற்கு அண்மையில் இதர மதத் தலைவர்கள் அமரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கொழும்பு பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை தமது ஆசனத்தில் அமர வந்த கையோடு அங்கிருந்த இரண்டு பிரதான பிக்குமார் இருவர் தமது ஆசனங்களில் இருந்து வெளியேற முயற்சித்தனர்.

சரிசமமாக பேராயருடன் அமர முடியாதென அவர்கள் தெரிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக விழா ஏற்பாட்டுக்குழுவினர் இதனை கவனித்து பின்னர் பேராயருக்கு வேறு ஒரு இடத்தை வழங்க தீர்மானித்தனர்.

எப்படியோ இந்த விடயத்தை பின்னர் அறிந்த ஜனாதிபதி கோட்டாபய , பாதுகாப்பு செயலாளரையும் ,இராணுவத் தளபதியையும் அழைத்து பேராயரிடம் வருத்தம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி அவர்கள் பேராயரை சந்திக்க சென்றனர். அதற்கு முன்னர் முக்கியமான மாநாயக்க தேரர்கள் சிலர் பேராயருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பை கோரியதாக தகவல்.

விழா ஏற்பாட்டுக் குழுவுக்கும் செம டோஸ் விழுந்ததாக கேள்வி..

——————————————————————————————————————————————————————————–

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பிரபல நாடொன்றில் தூதுவராக இருந்த பேராசிரியர் ஒருவர் – ரணிலுக்கு ஆலோசகர் – கடந்த வாரம் ஒரு நாள் ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்.

“ சேர்.. நான் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனது மகள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கிறார். அவரை பார்க்கச் சென்ற எனது மனைவியும் இங்கு திரும்பி வர முடியாத நிலை உள்ளது. அவர்களை உடனடியாக எடுத்துத் தாருங்கள்” என்று கோரிக்கை விடுத்தாராம்..

“ ஓ அப்படியா… போனை வையுங்கள்… திருப்பி அழைக்கிறேன்..” என்று கூறிய ஜனாதிபதி அரை மணி நேரத்தின் பின்னர் மீண்டும் அவரை அழைத்தார்.. “ உங்கள் குடும்பத்தினர் விரைவில் வருவார்கள்..” என்று தெரிவித்தார்..

பேராசிரியர் போனை வைத்த கையோடு வெளிநாட்டமைச்சரை தொடர்புகொண்ட ஜனாதிபதி .. “ எந்த அரசியலும் பார்க்கப்படக் கூடாது.. அவரின் குடும்பம் இலங்கை வரும் ஏதாவது ஒரு விமானத்தில் வர வேண்டும்..” என்று பணித்திருந்தார்..

இதனையடுத்து இரண்டு நாட்கள் கழிந்து சரக்கு விமானம் ஒன்றில் தாயும் மகளும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்..

————————————————————————————————————————————————————————————————-
இராணுவ வெற்றி விழாவில் கலந்து கொள்ளவிருந்த பொன்சேகா திடீரென கடைசி நேரம் தனது முடிவை மாற்றிக் கொண்டாராம்…

இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திரவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த பொன்சேகா தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் வரமுடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார்.

பொன்சேகா வந்தால் அவருக்குரிய பீல்ட் மார்ஷல் கௌரவத்தை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்..

—————————————————————————————————————————————————————————————–
ஆப்கானிஸ்தானில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் வைத்தியசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதால் தெற்காசிய நாடுகள் சிலவற்றில் அவ்வாறான தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தை சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளனவாம்.

இதனால் வைத்தியசாலைகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாம் .

கொரோனா நிலைமையில் நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு அவற்றுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவாம்.

————————————————————————————————————————————————————–

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அமைதியாக ஒரு இராஜதந்திரப் போரே இலங்கையில் நடந்துகொண்டிருக்கிறது.

யார் இலங்கைக்குள் செல்வாக்கு செலுத்துவது என்ற போட்டியில் சீனாவும் இந்தியாவும் போட்டியில் இறங்கியுள்ளன.

சீனா ஒரு தொகை முகமூடிகளை அனுப்பி அடுத்தவாரமே இந்தியா பெருந்தொகை மருந்துப்பொருட்களை அனுப்பியது.

சில தினங்களுக்கு முன்னர் சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் பேசி இலங்கையின் தேவைப்பாடுகளை கேட்டாரல்லவா? அதன் பின்னர் நேற்று கோட்டாபாயவுடன் பேசியுள்ள மோடி இலங்கையுடன் இந்தியா தோளோடு தோளாக நிற்குமென கூறியதுடன் கோட்டாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்..

எப்படியோ ஒரே நேரத்தில் சீனாவையும் இந்தியாவையும் கையாள்வதில் அரசு சற்று திணறுவதாகவும் தகவல்

———————————————————————————————————————————————————————-

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக முன்னாள் கடற்படைத் தளபதி , ஜனாதிபதியின் தற்போதைய ஆலோசகர் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்படவுள்ளாராம்.

தேர்தலின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாம்..

இன்னொரு விஷயம் தெரியுமா… தேர்தலின் பின்னர் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து சிறிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.

செலவை குறைக்க எடுக்கப்படவுள்ள அந்த தீர்மானத்தை இப்போதே சொன்னால் எலெக்சனுக்கு யாரும் வேலை செய்யமாட்டார்களென கருதப்படுவதால் அரசு அதனை கமுக்கமாக வைத்துள்ளதாம்…

————————————————————————————————————————————————————————-

கடந்த வாரம் பாதுகாப்புத் துறையில் உள்ள இருவருக்கு ஜனாதிபதி செம டோஸ் கொடுத்ததாக கேள்வி…

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கம்பஹா கொழும்பு மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் கூடுதலாக இருக்கிறது.

“பொலிஸ் என்ன செய்கிறது.. நித்திரை கொள்கிறதா?..”என்று ஒரு உயர் அதிகாரியை பார்த்து கேட்டாராம் ஜனாதிபதி..

அதேபோல் கடற்படை அணிவகுப்பில் இருந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சொல்லப்பட்டதால் அது தொடர்பிலும் இன்னொரு அதிகாரிக்கு பேச்சு விழுந்ததாம்…