விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் – அமெரிக்காவின் பதக்க வேட்டை தொடர்கிறது

பதினேழாவது, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஐந்தாவது நாள் போட்டி நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், பதக்கப்பட்டியலில் வழமைபோல் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கின்றது.

கட்டார் தலைநகர் டாக்காவில் இடம்பெற்றுவரும் போட்டிகளில், நேற்றைய நான்காம் நாள் நிறைவில், அமெரிக்கா 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் அடங்களாக 13 பதக்கங்களைப் பெற்று முதலாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்டவீரர், கிறிஸ்டியன் கொலமன் எதிர்பார்த்ததைப்போல் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் அவர் உலகின் வேகமான மனிதர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னர் இந்த சாதனை பல வருடங்களாக ஜமைக்காவின் உசைன் போல்ட் வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுபோல் கிறிஸ்டியன் டெய்லர் முப்பாய்ச்சலிலும், டிஅன்னா பிரைஸ் குண்டெறிதலிலும், (பெண்கள் பிரிவு) 4400 அஞ்சல் ஓட்டப் போட்டி ஆகியவற்றில் அமெரிக்கா தங்கங்களைப் பெற்றுக்கொண்டது.

சீனா இதுவரை, தலா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக 6  பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஜமைக்கா, இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று 4 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும், இதுவரை 17 நாடுகள் ஏதாவது ஒரு பதக்கத்தையேனும் பெற்றுள்ளதோடு, இன்றைய தினமும் பலப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

210 நாடுகளைச் சேர்ந்த 1900ற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 10 நாட்களில் 24 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 30 பதக்கங்களை வென்ற அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது.

11 பதக்கங்களை வென்ற கென்யா இரண்டாவது இடத்தையும், ஆறு பதக்கங்களை வென்ற தென்னாபிரிக்கா மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.