விளையாட்டு

உலகின் முன்னணி வீரர்களை பெயரிட்டது விஸ்டன் சஞ்சிகை – கோஹ்லிக்கும் கௌரவம்

‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ‘விஸ்டன்’ சஞ்சிகை இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி வீரர்-வீராங்கனை பட்டியலை  வெளியிட்டு இருக்கிறது.

5 பேர் கொண்ட இந்த பட்டியலில் இந்திய அணியின் தலைவர் விராட்கோஹ்லி , இங்கிலாந்து அணி வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ரோரி பர்ன்ஸ், இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை டாமி பீமோன்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் விராட்கோஹ்லி இந்த பட்டியலில் தொடர்ந்து 3-வது முறையாக இடம் பிடித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டில் விராட்கோஹ்லி 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து 11 சதம் உள்பட 2,735 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். அவரது டெஸ்ட் துடுப்பாட்டம் , குறிப்பாக இங்கிலாந்து தொடரில் வியக்கவைக்கும் வகையில் இருந்தது என்று ‘விஸ்டன்’ சஞ்சிகை பாராட்டி இருக்கிறது.

பெண்கள் ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை மந்தனாவும், 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும் முறையே சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.