இலங்கை

உலகத்தை வாட்டுகிறது கொரோனா பீதி !

 

சீனாவின் வூஹான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக, உலகளவில் 3,340 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலும் கொரானோ பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. சீனாவிற்கு வெளியே, இந்த வைரசால் அதிகம் பேர் உயிரிழந்தது இத்தாலியில் தான். சீனாவில் மட்டும் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

* சுவிட்சர்லாந்தில், 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 74 வயது பெண், நேற்று உயிரிழந்தார். இது, அந்நாட்டின் முதல் கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது

* ஆஸ்திரேலியாவில், கொரோனா பீதி காரணமாக, கை கழுவும் சோப், முகக் கவசம், கழிப்பறை காகிதம் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. சிட்னி அருகே, கழிப்பறை காகிதத்திற்காக, வாடிக்கையாளர்களுக்குள் நடந்த சண்டையை பொலிஸார் வந்து சமரசம் செய்து வைத்தனர். ஆஸ்திரேலியாவின், ‘டார்வின், என்.டி., நியூஸ்’ என்ற நாளிதழ்கள், தங்கள் வாசகர்களின் அவசர தேவைக்காக, எதுவும் அச்சிடாத எட்டு பக்க இணைப்பை, நாளிதழுடன் வழங்கி வருகின்றன.

* வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், இந்திய பள்ளியில் படித்து வந்த, 16 வயது சிறுமிக்கு, கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது தந்தையிடம் இருந்து, இவருக்கு தொற்று பரவியது தெரிய வந்தது. இதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்சில், 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

* தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. துருக்கியில் இருந்து, சிங்கப்பூர் வந்த ஒரு பயணிக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது

* மேற்கு ஆப்ரிக்க நாடான மவுரிடானியா நாட்டுக்கு, இத்தாலியைச் சேர்ந்த, 15 சுற்றுலா பயணியர், நேற்று முன்தினம் வந்தனர். அவர்களை, தனிமை முகாமில் தங்க வைக்க, விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதற்குள், 15 பயணியரும் தப்பினர். அவர்களை பிடித்து வந்த அதிகாரிகள், மீண்டும் இத்தாலிக்கு அனுப்பி வைத்தனர்

* அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கி வந்த, ‘கிராண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பலில், 11 ஊழியர்கள், 10 பயணியருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அக்கப்பல், கலிபோர்னியா துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்

* வட கொரியா, தன் நாட்டு எல்லைகளை மூடியதற்கு, தென் கொரியா கண்டனம் தெரிவித்தது. இது, ‘பயத்தில் நாய் குரைப்பதை போன்ற செயல்’ என, வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரி, கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தென் கொரிய மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வட கொரிய ஜனாதிபதி கிம், நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

* இங்கிலாந்திலும், கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். போஸ்னியா, ஹெர்ஜிகோவினா, ஸ்லோவேனியா, தென் ஆப்ரிக்காவிலும் தலா ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.