விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் – 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 38-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இருவரும் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை கவனமாக எதிர்கொண்டனர். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டம் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் தனது அரைசதத்தை பதிவு செய்த ஜாசன் ரோய் 66(57) ரன்களில் பிடிகொடுத்தார்.. அவரை தொடர்ந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி தனது சதத்தினை பதிவு செய்த பேர்ஸ்டோ 111(109) ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த அணித்தலைவர் இயான் மோர்கன் 1(9) ரன்னில் அவுட்டாக, பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இதில் ஜோ ரூட் 44(54) ரன்களில் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 20(8) ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 7(5) ரன்னிலும், அதிரடியாக ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த பென் ஸ்டோக்ஸ் 79(54) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பிளங்கெட் 1(4) ரன்னுடனும், ஜோப்ரா அர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் லோகேஷ் ராகுல் 0(9) டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இணைந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம், அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் தனது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி 66(76) ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடி தனது சதத்தை பதிவு செய்த ரோகித் சர்மா 102(109) ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ரிஷப் பாண்டுடன், ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் ரிஷாப் பாண்ட் 32(29) ரன்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ஹர்திக் பாண்ட்யாவுடன், டோனி ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஹர்திக் பாண்ட்யா 45(33) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த டோனி, கேதர் ஜாதவ் ஜோடி இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சில் ரன் சேர்க்க திணறினர்.

இறுதியில் கேதர் ஜாதவ் 12(13) ரன்களும், டோனி 42(31) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 50 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பிளங்கெட் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.