விளையாட்டு

உலகக் கிண்ணம் – பாகிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

இங்கிலாந்தில் நடந்து வரும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கிண்ண போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டிட்ராப்போர்ட் மைதானத்தில் நடக்கிறது

இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரலில் காயமடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார்.

உலக கிண்ண போட்டியில் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியதில்லை என்ற நீண்டகால சோகத்துக்கு இந்த தடவை முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள்.

இந்த உலக கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரை மழையின் குறுக்கீடு ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்து விட்டது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் ரத்தாகியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடவுள்ள மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் மழை பெய்வது நின்றது சற்று ஆறுதல் தந்தது.

இன்றைய வானிலை அறிக்கையில், தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. எனினும், காலை 7 மணியளவில் மழை சற்று ஓய்ந்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஷதப் கான் மற்றும் இமத் வாசிம் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்திய அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளார்.