விளையாட்டு

உலகக் கிண்ணம் – பாகிஸ்தான் தென்னாபிரிக்கா இன்று மோதல் !

 

உலகக் கிண்ண போட்டியில் நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் அணி இன்று தென் ஆபிரிக்காவை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இன்று நடக்கும் நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன. புகழ்பெற்ற இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் நடக்கும் முதல் போட்டி இது தான்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளான பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான்.

பாகிஸ்தான் அணிக்கு துடுப்பாட்டம் சீராக இல்லை. பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டிங் செய்கிறார்கள். மூத்த வீரர் சோயிப் மாலிக் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல் சேர்க்கப்படலாம். பந்து வீச்சில் முகமது அமிர் (13 விக்கெட்) தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள்.

தென் ஆபிரிக்கா எப்படி?

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளி மட்டுமே பெற்று இருக்கிறது. கிட்டத்தட்ட அடுத்து சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட தென்ஆப்பிரிக்க அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டில் ஏற்றமும், மற்ற ஆட்டங்களின் முடிவு எல்லா வகையில் சாதகமாகவும் அமைந்தால் ஒரு வேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு மிரட்டலாக உள்ளது. ஆனால் பேட்டிங்கில் தான் ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சிலரே கணிசமாக ரன்கள் எடுக்கிறார்கள். அதுவும் அந்த அணியில் இருந்து இன்னும் யாரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இது தான் அவர்களின் பலவீனமாக தெரிகிறது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: குயின்டன் டி கொக், அம்லா, பொப் டு பிளிஸ்சிஸ் (கெப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாய, கிறிஸ் மோரிஸ், ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி.

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஷகீன் அப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது அமிர்.