விளையாட்டு

உலகக் கிண்ணம் – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கட்டுக்களால் வெற்றி !

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமத் ஷா மற்றும் குல்படின் நைப் களமிறங்கினர். இதில் குல்படின் நைப் 15 ரன்னில் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே ஹஸ்மத்துல்லா டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ரமத் ஷா 35 ரன்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த இக்ரம் அலி மற்றும் அஸ்ஹார் ஆப்கன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த அஸ்ஹார் 42 ரன்களில் போல்ட் ஆக, அவரை தொடர்ந்து இக்ரம் அலி 24 ரன்னில் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த முகமது நபி 16 ரன்னிலும், ஓரளவு ரன் சேர்த்த நஜிபுல்லா ஜட்ரன் 42 ரன்களிலும், ரஷித்கான் 8 ரன்னிலும், ஹமித் ஹசன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்தது. கடைசியில் சமியுல்லா ஷின்வாரி 19 ரன்னுடனும், முஜீப் ரகுமான் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியில் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், இமாத் வாசிம் மற்றும் வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஷதப் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரகளாக பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் களமிறங்கினர். இதில் பஹார் ஜமான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த இமாம் உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இமாம் உல்-ஹக் 36 ரன்களில் அவுட்டாக, அவரை தொடர்ந்து பாபர் அசாம் 45 ரன்களில் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த முகமது ஹபீஸ் 19 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 27 ரன்னிலும், சர்ப்ராஸ் அகமது 18 ரன்னிலும், ஷதப் கான் 11 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (230 ரன்கள்) எட்டியது. கடைசியில் இமாத் வாசிம் 49 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் ரகுமான் மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டுகளும், ரஷித்கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.