விளையாட்டு

உலகக்கிண்ண கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 35-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருணாரத்னே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா பொறுப்புடன் விளையாடி அணியை சற்று சரிவிலிருந்து மீட்டனர். இதில் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா தலா 30 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதற்கு பின் களமிறங்கிய மேத்யூஸ் 11 ரன்னிலும், குசல் மென்டிஸ் 23 ரன்னிலும், தனஞ்ஜெய டி சில்வா 24 ரன்னிலும், ஜீவன் மென்டிஸ் 18 ரன்னிலும், திசர பெரேரா 21 ரன்னிலும், உதான 17 ரன்னிலும், மலிங்க 4 ரன்னிலும் என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை இழந்து வெளியேறினர்.

இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களை எடுத்தது. கடைசியில் லக்மல் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

தென்ஆப்பிரிக்க அணியில் பிரிட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும், டுமினி மற்றும் பெலக்வாயோ 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக் மற்றும் அம்லா களமிறங்கினர். இதில் குயின்டன் 15 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ், அம்லா உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. பொறுப்புடன் ஆடிய இவ்விரு வீரர்களும் தங்களது அரைசதத்தினை பதிவு செய்து அசத்தினர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து ( 206 ரன்கள்) இலக்கை எட்டியது. கடைசியில் அம்லா 80 ரன்களுடனும், டு பிளிஸ்சிஸ் 96 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணியில் மலிங்க 1 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.