உலகம்

‘ உதிரிப்பூக்கள் ‘ மகேந்திரன் மறைந்தார்

 

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் (79) சென்னையில் காலமானார்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சூழலில், மகேந்திரனின் உடல்நிலை திடீரென கடந்த புதன்கிழமை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மகேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முள்ளும் மலரும் படம் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான இயக்குநர் மகேந்திரன் , தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, என முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.