Breaking News

இ தொ கா பொதுச் செயலராகிறார் ஜீவன் – தலைவராக ரமேஷ் ?

 

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஜீவன் தொண்டமான் நாளை தெரிவு செய்யப்படலாமென அறியமுடிகின்றது.

கொட்டகலை சி எல் எவ் மண்டபத்தில் நாளை காலை நடைபெறும் பொதுச் சபை கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெறவுள்ளது.

அதேசமயம் காங்கிரசின் தலைவராக முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும் கட்சியின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவு செய்யப்படலாமென தெரிகிறது.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவி தொண்டமான் குடும்பத்தின் ஒருவருக்கு வழங்கப்படுவதால் தலைவர் பதவியை குடும்ப உறுப்பினர்கள் – உறவினர்கள் எவருக்கும் வழங்காமல் – புதிய மறுசீரமைப்பை கருத்திற்கொண்டு தோட்டத் தொழிலாளியின் மகன் என்ற அடிப்படையில் கட்சியின் நீண்டகால தொண்டராக செயற்பட்ட ரமேஸ்வரனுக்கு வழங்க காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிந்தது.

அதேசமயம் ஜீவனும், ரமேஷும் தேர்தலில் நுவரெலியாவில் போட்டியிடவுள்ளதால் இருவரும் இணைந்து கட்சிக்கு கூடுதல் வாக்குகளை பெற இந்த நியமனங்கள் உதவக் கூடுமென கட்சிக்குள் கருதப்படுவதாக தெரிகிறது.

எவ்வாறாயினும் நாளை செயலாளர் மட்டும் சிலசமயம் தெரிவு செய்யப்பட்டால் தலைவர் பதவி தேர்வு தேர்தல் முடிந்த பின் நடக்கலாம்.

செயலாளராக தெரிவு செய்யப்படவுள்ள ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு நாளை மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளது. ஏற்கனவே நேரம் ஒதுக்கப்பட்ட இந்த சந்திப்பில் மலையகத்தின் முக்கிய பல பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன.