விளையாட்டு

இலங்கை வீரர்களை மிரட்டிய இந்தியா : பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு !

 

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடக் கூடாது என இந்தியா மிரட்டியிருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் சிம்பாப்வே (2015), மேற்கிந்தியத் தீவுகள் (2018) தவிர, மற்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செப்டெம்பர் 27 முதல் ஒக்டொபர் 9 வரை பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்நிலையில் அணியின் மூத்த வீரர்களான கருணாரத்ன, மாலிங்க, மத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள், பாதுகாப்பு இருக்காது எனக் கூறி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர், இது தொடர்பில் இந்தியாவின் மீது பழி சுமத்தினார். இது குறித்து அவர் கூறுகையில்,

பாகிஸ்தான் சென்று விளையாடினால் ஐ.பி.எல்., தொடரில் விளையாட அனுமதிக்க முடியாது என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டி இருக்கும். அதனால் தான் அவர்கள் பாகிஸ்தான் வர மறுக்கின்றனர் என்று கூறினார்.