இலங்கை

இலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில்! – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்

 

இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் இராஜதந்திரி யசூசி அகாசி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

“இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்களிப்பை அரசுக்கு வழங்கியிருந்தது. எனினும், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்க முடியாது. வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசுக்கு நினைவூட்டி – அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.” – என்றார் சம்பந்தன்

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.