இலங்கை

இலங்கையில் நடந்தது சர்வதேச பயங்கரவாதம் – அழிக்க உலக நாடுகளுடன் கை கோர்க்க வேண்டும் ! – ஜனாதிபதி மைத்ரி

 

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேசத்துடன் கை கோர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த 10 வருட நிறைவையொட்டி இன்று நடந்த நினைவுகூரல் நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,

30வருட காலத்தில் யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் . ஊனமுற்ற படையினருக்கும் எனது நன்றி. இப்போது சேவையில் கடமையாற்றும் அனைத்து படையினரை நான் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன் .

10 வருடம் நாம் இவர்களை நினைவு கூர்வது நடந்தாலும் இவர்களின் குடும்பங்கள் 40 வருடங்களுக்கு மேலாக இவர்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த யுத்தத்தை வென்றோம். அரசியல் தலைவர்களை நாம் இழந்தோம். இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேல் படைகள் வந்தன.ஆனாலும் புலிகளை வெல்ல முடியவில்லை. வெளிநாட்டு படைகள் வந்தாலும் இறுதியில் எமது படைகளால் தான் நாம் வென்றோம். அதுவே வரலாறு. இறுதியில் புலிகளின் மிலேச்ச தலைவரை கொன்று சுதந்திரம் அடைந்தோம்.

அப்படியான நிலையில் தான் நாம் கடந்த மாதம் இன்னுயிர்களை இழந்து பயங்கரவாதத்தை எதிர்கொண்டோம். ஏப்ரல் 21 என்பது இலங்கை பிரச்சினையல்ல. அது சர்வதேச பிரச்சினை. புலனாய்வுத்துறையினர் தமது அனுபவங்களை கொண்டு இந்த சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்கான தகுதி எமது படையினருக்கு உண்டு.

மத அடிப்படைவாதம் என்பது எப்போது தலைதூக்கும் என்பது யாருக்கும் தெரியாது.ஆனால் அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.நிரந்தர அமைதியை ஏற்படுத்த படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்றார் ஜனாதிபதி