இலங்கை

இலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி

இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் முதலாவது ஊடக மாநாடுகடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் நாரா. டி. அருண்காந்த், செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் சுமார் 14000 க்கும் அதிகமான உறுப்பினர்களையும் 350000 க்கும் அதிகமான ஆதரவாளர்களையும் கொண்ட உறுதியான அடித்தளத்துடன் கூடிய இவர்களது அரசியல் பிரவேசம் தேசிய அரசியலில் ஒரு முக்கிய விடயமாக அரசியல் நோக்கர்களால் அவதானிக்கப்படுகிறது.

தலைவர் நாரா. டி. அருண்காந்த், இங்கு தெரிவித்ததாவது “ஆரம்பத்தில் அரசியலில் பிரவேசிக்க எந்த நோக்கமும் இல்லாத போதிலும் மதம், மொழி என பேதங்களை கொண்ட அரசியல் கலாச்சாரம் நாட்டை சீரழித்து கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மதம், மொழி கடந்த நாட்டுக்கு நன்மை தரக்கூடிய ஒரு பலமான தேசிய அரசியலை உருவாக்க இந்த கட்சியினூடாக அரசியலில் பிரவேசித்திருக்கிறோம். எங்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு முதுகெலும்புள்ள நன்மை தரக்கூடிய ஒரு நல்ல தலைவரை உருவாக்க மக்களுக்கு நிச்சயம் உதவும்.”

மேலும் அவர்களது கொள்கைகள் பற்றி செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிட்டார், “பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், குறிப்பாக தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதுடன் கட்சி என்ற ரீதியில் நாமும் நேரடியான வேளைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இதன்மூலம் இம்மக்களின் பொருளாதாரம் உயர்வடைவதுடன் அவர்களின் கல்வி தொழில்வாய்ப்புக்கள், தொழில்சார் நிபுணத்துவம், உடல் உள சமூக மற்றும் ஆன்மீக சுகாதாரம் போன்ற விடயங்களில் நிறைவான இலக்குகளை எட்டச்செய்ய நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய முயற்சிகளை கட்சி என்ற ரீதியில் மேற்கொள்ளவுள்ளோம்.

இவைகளுக்கு அப்பால் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியானது வெளிநாட்டு அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி புதிய தொழில்வாய்ப்புக்களை இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதை முதன்மையான பணியாக மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி சார்ந்த துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சமவசதி சமவாய்ப்பு என்ற எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்தார்.