இலங்கை

இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கை தொடர்கிறது: பழ. நெடுமாறன்

இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் சனிக்கிழமை தொடங்கிய முள்ளிவாய்க்கால் படுகொலை 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 2009 -ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தது. இதில், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையம் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், இதுவரை எத்தகைய விசாரணையும் நடைபெறவில்லை. இதுபற்றி உலக சமுதாயமும் கவலைப்படாத சூழ்நிலை நிலவுகிறது.
இலங்கையில் இன்னும் அங்கு வாழ்கிற மக்களுக்குத் துயரம் தீரவில்லை. இன்னும் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இலங்கையில் நிகழ்ந்தது போர்க் குற்றம் அல்ல. திட்டமிட்டு இன அழிப்பு நடவடிக்கையைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் நிகழ்ந்த தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு குற்றம் தொடர்பாக இதுவரை சர்வதேச சமுதாயம் விசாரணை நடத்தவோ, அவர்களைத் தண்டிக்கவோ முன்வரவில்லை.

போஸ்னியாவில் இனப்படுகொலை நடந்தபோது, ஐ.நா. பாதுகாப்புப் படை அங்கே அனுப்பப்பட்டு, அந்த மக்கள் பாதுகாக்கப்பட்டனர். இப்போது, இலங்கையில் இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் இன அழிப்பு நடவடிக்கை தொடர்கிறது. எனவே, இதில் ஐ.நா. சபை தலையிட்டு, அம்மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுதொடர்பான தீர்மானங்களை ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்ற இருக்கிறோம் என்றார் நெடுமாறன்.
முன்னதாக, தொடக்க நாளில் மாநாட்டு மலரை இந்திய தேசிய லீக் அகில இந்திய பொதுச் செயலர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் வெளியிட்டார்.

தொடர்ந்து, ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் மாவீர நடுகற்கள் நூலையும், வைகறைவாணனின் கொடை தருக, கோடி பெறுக நூலையும், குறுந்தகடையும் பழ. நெடுமாறன் வெளியிட்டார். பின்னர், பாவரங்கம், கருத்தரங்கம், பொது அரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.