Breaking News

” இலங்கையிலிருந்து இந்தியாவில் தீவிரவாதிகளை வழிநடத்திய சஹ்ரான் ” – முக்கிய தகவல் வெளியானது !

”ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் காலுான்றும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு பின்னணியில் செயற்பட்டவருமான ஸஹ்ரான் ஹாஷிமின் வழிநடத்தல் இவர்களுக்கு இருந்துள்ளது.”

இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவுகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் வை .சி.மோடி பேசியதாவது: அண்டை நாடான வங்கதேசத்தை மையமாக வைத்து ஜமாதுல் முஜாகிதீன் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பினர் வங்கதேசத்தில் ஏற்கனவே சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த அமைப்பினர் இந்தியா முழுவதும் தங்கள் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்ட், பீஹார், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் இவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 125 பேர் இந்த அமைப்பின் தலைவர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர்; அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அவர்களை கண்காணித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் இவர்களை பற்றிய தகவல்களை அளித்துள்ளோம் -இவ்வாறு அவர் பேசினார்.

இங்கு தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் பேசியதாவது:

ஜமாதுல் முஜாகிதீன் பங்ளாதேஷ் அமைப்பினர் 2007ல் மேற்குவங்க மாநிலத்தில் தான் முதலில் கால் பதித்தனர். இதன் பின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கள் நடவடிக்கைகளை துவக்கினர். கடந்த 2014 – 18ம் ஆண்டுகளில் 130 மறைவிடங்களை பெங்களூருவில் ஏற்படுத்தினர். இதன் பின் தென் மாநிலங்கள் முழுவதும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர்.

இந்த அமைப்பினர் தமிழகம் – கர்நாடகா எல்லை பகுதியில் கிருஷ்ணகிரியில் ரொக்கெட் லோஞ்சரை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு பழிவாங்கும் வகையில் புத்த வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இந்த அமைப்பினர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த 33 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேரும் கேரளாவைச் சேர்ந்த 17 பேரும் தெலுங்கானாவைச் சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட சஹ்ரான் ஆகியோரது பேச்சுகளால் கவரப்பட்டு ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக மாறியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஏற்கனவே செயல்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் பஞ்சாபில் மீண்டும் தங்கள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு எல்லை பகுதியிலிருந்தும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் நிதி உதவி கிடைக்கிறது. பஞ்சாபில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி அமைதியற்ற சூழலை உருவாக்குவது தான் இவர்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாகாலாந்து மாநில கவர்னருமான ஆர்.என்.ரவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.