விளையாட்டு

இலங்கைக்கு புதிய பயிற்சியாளர்கள்; ஜொன்டி ரோட்ஸ் பட்டியலில்இலங்கை தேசிய கிரிக்கெட அணியின், பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடருக்காக தற்போது அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை அணிக்கு புதிய  பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர், மார்க் ராம் பிரகாஷை இலங்கையின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரியவருகிறது.

இலங்கை கிரிக்கெட் சபை ராம் பிரகாஷ் உடனான ஒப்பந்தத்தை உறுதி செய்தால் ருமேஷ் ரத்னாயக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பெறுப்பை மீண்டும் ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நம்பகமான வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.

மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவரான ஜொன்டி ரோட்ஸ் இலங்கை கிரிக்கெட்டின்  களத்தடுப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பயிற்சியாளராக  பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்தாக்கை ஆலோசனை பயிற்சியாளராக பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.

புதிய பயிற்சியாளர் நியமனங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையால் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நவம்பரில் தேசிய அணியின் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.