உலகம்

இராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார் நராவனே

 

இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து மனோஜ் முகுந்த் நராவனேவிடம் விபின் ராவத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இராணுவ தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெறும் நிலையில், இராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய இராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.

கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவு மற்றும் காலாட் படையின் கமாண்டராக இருந்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு எக்கடமி , இந்திய ராணுவ எக்கடமி ஆகியவற்றில் பயிற்சி முடித்த முகுந்த் நராவனே, கடந்த 1980-ஆம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது இராணுவப் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.