விளையாட்டு

இரண்டாவது டெஸ்டிலும் தடுமாறும் இந்தியா

 

நியுசிலாந்து அணிக்கு எதிராக இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியுசிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலையில், துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சில் சுருண்டது.

தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், ப்ரித்திவ் ஷா மற்றும் ஷட்டிஷ்வர் புஜாரா ஆகியோர் தலா 54 ஓட்டங்களையும், ஹனுமா விஹாரி 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியுசிலாந்து பந்து வீச்சில் கடந்த போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட கைல் ஜெமிசன் 5 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 2 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.