உலகம்

இந்தோனேசியாவில் அமைச்சரையும் பாதுகாவலரையும் கத்தியால் குத்திய இளைஞர் !

 

இந்தோனேசிய அமைச்சர் ஒருவரையும் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலரையும் பொது இடத்தில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசிய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறையில் அமைச்சராகப் பணியாற்றி வருபவர் விராண்டோ. இவர் வியாழனன்று பாண்டேன் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அவர் தனது வாகனத்தில் வந்து இறங்கிய போது இளைஞர் ஒருவர் தன கையில் வைத்திருந்த கத்தியால் அமைச்சரை வயிற்றில் தாக்கினார். அதைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் முதுகில் குத்து விழுந்தது.

உடனடியாக சுதாரித்த அமைச்சர் மற்றும் அருகிலிருந்தவர்கள் அந்த இளைஞரையும் அவருடன் வந்திருந்த அவரது மனைவியையும் பிடித்துக் கைது செய்தார்கள்.

காயமடைந்த அமைச்சர் விராண்டோ மற்றும் காவல்துறை அதிகாரி இருவரும் பண்டெக்லாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் இணைவதற்கு முன்பு பாதுகாப்பு படையில் விராண்டோ பணியாற்றி வந்த போது, 1998-ஆம் ஆண்டு நடந்த மாணவர் புரட்சியை ஒடுக்குவதிலும், 1999-ஆம் ஆண்டு நடந்த கிழக்கு திமோர் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பின் போதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.