உலகம்

இந்திய – பாகிஸ்தான் பிரச்சினைகள் குறித்து இம்ரானுடன் ட்ரம்ப் பேச்சு !

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ஆலோசனை நடத்தினர்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் பலர் அமெரிக்காவில் குவிந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார்.

இருவரும் இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது பற்றி விவாதித்தனர். எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசினர்.

மேலும், காஷ்மீர் பிரச்சினையால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவது பற்றியும் அவர்களது பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இந்த பதற்றத்தை தணிப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினர்.

அத்துடன், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டனர்.

பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் காஷ்மீர் விவகாரம் பற்றி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

ஒரு பாகிஸ்தான் நிருபர், டிரம்பை பார்த்து, காஷ்மீர் நிலவரம் பற்றி கருத்து கேட்டார். அதற்கு டிரம்ப் அவரை பார்த்து, “நீங்கள் இம்ரான்கான் குழுவை சேர்ந்தவரா? நீங்கள் கேள்வி கேட்கவில்லை, அறிக்கை விடுகிறீர்கள்” என்று கூறினார்.

அந்த நிருபர் விடாமல் அதே கேள்வியை எழுப்பினார். உடனே டிரம்ப், பக்கத்தில் இருந்த இம்ரான்கானிடம் “இந்த மாதிரி நிருபர்களை எங்கே பிடித்தீர்கள்?” என்று கேட்டார்.